தாயின் விபரீத தண்டனையால் இறந்த சிறுமி வீட்டில் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை

தாயின் விபரீத தண்டனையால் இறந்த சிறுமி வீட்டில் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்தினர்.;

Update: 2022-01-10 21:35 GMT
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை திடீர்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மணிமேகலை. இவர்களுக்கு மகாலட்சுமி(வயது 10), விக்னேஷ் (7), சுப்புலெட்சுமி (3) என்ற 3 குழந்தைகள் இருந்தனர். இதில் மகாலெட்சுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் மகாலட்சுமி கடந்த 6-ந் தேதி தனது வீட்டிற்கு அருகில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து 70 ரூபாயை எடுத்துச்சென்று செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மணிமேகலையும், உறவினர் ஒருவரும் சேர்ந்து மகாலட்சுமியை நெருப்பில் மிளகாயைப் போட்டு அந்தப் புகையை சுவாசிக்குமாறு அமுக்கி பிடித்ததாகவும், கால் மற்றும் வாய்ப்பகுதியில் சூடு வைத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் துடிதுடித்த மகாலட்சுமி மயக்கமடைந்தார்.
இதையடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகாலட்சுமி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து சிறுமியின் சாவிற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மகாலட்சுமியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது உடலை திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் நேற்று பிரேத பரிசோதனை செய்து, உடல் உறுப்புகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். பரிசோதனை முடிவு வந்தவுடன் இந்த வழக்கின் தன்மை மாறுபடலாம் என போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி மகாலெட்சுமியின் வீட்டில் மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி அருள்செல்வி, குழந்தைகள் நலக்குழு தலைவர் வக்கீல் அய்யம்பெருமாள் மற்றும் குழுவினர் நேரில் சென்று குழந்தை இறந்தது குறித்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் செய்திகள்