ஓமலூர் அருகே, ரூ.1 கோடி கேட்டு சாயப்பட்டறை உரிமையாளரை கடத்திய கும்பல் சிக்கியது எப்படி? போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்

ஓமலூர் அருகே ரூ.1 கோடி கேட்டு சாயப்பட்டறை உரிமையாளரை கடத்திய கும்பல் சிக்கிய நிலையில், அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2022-01-10 21:29 GMT
ஓமலூர்,
சாயப்பட்டறை உரிமையாளர்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த மரக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 53). இவருடைய அண்ணன் மகாலிங்கம். இருவரும் சேர்ந்து பஞ்சுகாளிபட்டியில் சாயப்பட்டறை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி இரவு கோவிந்தராஜ் சாயப்பட்டறையை பூட்டிவிட்டு வீட்டுக்கு மோட்டார்  சைக்கிளில் சென்றார். 
மரக்கோட்டை அருகே அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 பேர் கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி காருவள்ளிக்கு எப்படி செல்ல வேண்டும் என்று விசாரித்துள்ளனர். அதே நேரத்தில் பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். 
இதையடுத்து கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கோவிந்தராஜை திடீரென குண்டுக்கட்டாக தூக்கி காரில் போட்டு கொண்டு கடத்தி சென்றனர். அவருடைய மோட்டார் சைக்கிளையும் அந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து ஓட்டிச்சென்றனர்.
ரூ.1 கோடி கேட்டு மிரட்டல்
இதனிடையே கோவிந்தராஜின் அண்ணன் மகாலிங்கத்துக்கு அந்த கடத்தல் கும்பல் செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.1 கோடி கேட்டு மிரட்டி உள்ளனர். அதற்கு அவ்வளவு பணம் இல்லை என அவர் கூறவே, ரூ.20 லட்சம், ரூ.15 லட்சம் என கடத்தல் கும்பல் தொகையை குறைத்துக்கொண்டே வந்துள்ளனர். 
இதையடுத்து அந்த கும்பல் குறித்து மகாலிங்கம் ஓமலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 
இந்த நிலையில் மேச்சேரி காளிப்பட்டி பகுதியில் பாலிடெக்னிக் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சாயப்பட்டறை உரிமையாளரை கடத்தி வந்த காரும் வாகன சோதனையில் சிக்கியது. 
உடனே அந்த கடத்தல் கும்பலை மடக்கி பிடித்த போலீசார், இது தொடர்பாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்த கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரையும், கடத்தப்பட்ட கோவிந்தராஜையும் ஓமலூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். 
திடுக்கிடும் தகவல்கள்
இதில் அந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகரை சேர்ந்த இம்ரான் (23), மேச்சேரி புக்கம்பட்டி மோளகரட்டூரை சேர்ந்த வெங்கடேஷ் (38), சத்தியமங்கலம் தண்டுமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (30), சத்தியமங்கலம் வீரப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (30) என்பது தெரியவந்தது. 
இந்த நிலையில் பிடிபட்ட இம்ரான் உள்பட 4 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மேச்சேரி பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் சத்தியமங்கலத்தில் சாயப்பட்டறை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு சாயம் வினியோகம் செய்த சாயப்பட்டறை உரிமையாளர் கோவிந்தராஜ் என்பவர் பணம் வசதி படைத்தவர் என்பதை வெங்கடேஷ் தெரிந்து கொண்டார். இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கடத்தல் கும்பலை சேர்ந்த அருண்குமார் என்பவரும், மயிலாடுதுறையை சேர்ந்த பிரபல ரவுடி நீடூர் விஜயன் என்பவரும் கூட்டாளி என்பதும், அவர்கள் இருவரும் சேர்ந்து தென்காசியில் ஒருவரை கடத்தி ரூ.20 லட்சம் வாங்கி உள்ளனர்.
கிணற்றில் குதித்த பள்ளி உரிமையாளர்
மேலும் இவர்களுடன் வெங்கடேஷ், இம்ரான், விக்னேஷ், சதீஷ்குமார் மற்றும் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவர் சேர்ந்து பல்வேறு திருட்டு மற்றும் ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்தியூரை சேர்ந்த ெமட்ரிக் பள்ளி உரிமையாளர் முருகேசன் என்பவரை கடத்தி பணம் கேட்டதும் அவர் முடியாது எனக்கூறி கிணற்றில் குதித்ததால் அவர்கள் விட்டுச்சென்றதும் தெரியவந்தது. மேலும் இவர்கள் இளம்பிள்ளை பகுதியில் சங்கர் என்பவரை கடத்த முயற்சி செய்து, அது தோல்வியில் முடிந்துள்ளது.
சமீபகாலமாக அருண்குமார் தனியே இயங்கி கடத்தல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் தான் வெங்கடேஷ் கொடுத்த தகவலின் பேரில் கோவிந்தராஜை, கடந்த 8-ந் தேதி கடத்தி சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளன.
5 பேர் கைது
இதையடுத்து கோவிந்தராஜை கடத்தி செல்ல பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் மற்றும் 3 செல்போன்கள், ஒரு கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கோவிந்தராஜனின் மோட்டார் சைக்கிளையும் போலீசார் மீட்டனர். இதைத்தொடர்ந்து இம்ரான், வெங்கடேஷ், விக்னேஷ், சதீஷ்குமார் ஆகிய 4 பேரையும் நேற்று ஓமலூர் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்த அருண்குமாரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
ரூ.1 கோடி கேட்டு கடத்தப்பட்ட சாயப்பட்டறை உரிமையாளர் கோவிந்தராஜின் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற கடத்தல் கும்பலை சேர்ந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றது சத்தியமங்கலம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அருண்குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. அவர் நேற்று ஓமலூர் மேம்பாலம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது அருண்குமாரை போலீசார் மடக்கி பிடிக்கமுயன்ற போது, அவர் பாலத்தில் இருந்து குதித்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரையும் நேற்று மாலை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்