அரசு பஸ் டிரைவரிடம் இடமாறுதல் செய்வதாக மிரட்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொ.மு.ச. செயலாளர் அதிரடி கைது

தாரமங்கலத்தில் அரசு பஸ் டிரைவரை பணி இடமாறுதல் செய்துவிடுவதாக மிரட்டி ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளரை சேலம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.;

Update:2022-01-11 02:59 IST
தாரமங்கலம்,
பணி இடமாறுதலுக்கு லஞ்சம்
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் இடமாறுதல் மற்றும் வழித்தட பணி இடமாறுதலுக்கு தொழிற்சங்க நிர்வாகிகள் லஞ்சம் கேட்பதாகவும், சிலரை இடமாறுதல் செய்து விடுவதாக பணம் கேட்டு மிரட்டி வருவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் மானத்தாள் கிராமம் கண்காணிப்பட்டி பகுதியை சேர்ந்த பரமசிவம் (வயது 43) என்பவர் தாரமங்கலத்தில் இருந்து திருவாரூர் செல்லும் அரசு பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். 
இவரிடம் நீங்கள் தொடர்ந்து இந்த பஸ்சில் பணியாற்ற வேண்டும் என்றால் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து விடுவோம் என்று தொழிலாளர் முன்னேற்ற சங்க செயலாளரும், மேச்சேரி அருகே உள்ள அமரம் கோல்காரன் வளவு பகுதியை சேர்ந்தவருமான குணசேகரன்(46) மிரட்டியதாக கூறப்படுகிறது.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
இதுபற்றி பரமசிவம் சேலம் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் குணசேகரனை பொறிவைத்து பிடிக்க திட்டமிட்டனர். இதையடுத்து பரமசிவத்திடம் ரசாயன பவுடர் தடவிய 5 ஆயிரத்துக்கான ரூபாய் நோட்டுகளை லஞ்சஒழிப்பு போலீசார் நேற்று கொடுத்து அனுப்பினர். அவர் அந்த ரூபாய் நோட்டுகளுடன் தாரமங்கலம் தெப்பக்குளம் அருகே பிற்பகல் 12.50 மணியளவில் வந்தார். அங்கு குணசேகரனை வரவழைத்து அந்த  லஞ்ச பணத்தை பரமசிவம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த சேலம் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜா, இன்ஸ்பெக்டர்கள் நரேந்திரன், முருகன் ஆகியோர் லஞ்ச பணத்துடன் தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகி குணசேகரனை மடக்கி பிடித்தனர்.  
கைது
இதைத்தொடர்ந்து  தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு அவரை அழைத்து சென்று தொழிற்சங்க  நிர்வாகிகள் மற்றும் தாரமங்கலம் அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளர் ஆகியோரிடம் 5 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை முடிவில் குணசேகரன் லஞ்சம் வாங்கியது உறுதியானதை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 7-ந் தேதி தமிழக சட்டசபை கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தி.மு.க.வினர் சிறு தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பேன் என்று உறுதி கூறினார். அவர் உறுதி அளித்த நிலையில், அரசு பஸ் டிரைவர் பணி இடமாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்த சம்பவம் போக்குவரத்து தொழிலாளர்களிடையே பரபரப்பாக பேசப்படுகிறது.

மேலும் செய்திகள்