கன்னட இலக்கியவாதி சந்திரசேகர் பட்டீல் மரணம்

கன்னட இலக்கியவாதி சந்திரசேகர் பட்டீல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2022-01-10 21:16 GMT
பெங்களூரு: கன்னட இலக்கியவாதி சந்திரசேகர் பட்டீல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

போராட்டம் நடத்தி சிறைவாசம்

ஹாவேரி மாவட்டம் சாவனூர் தாலுகா ஹத்திமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் பட்டீல்(வயது83). இவர் 1939-ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ந் தேதி பிறந்தார். இவர் பிரபலமான கன்னட இலக்கியவாதி ஆவார். கன்னடத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் கன்னட சாகித்ய பரிஷத், கன்னட வளர்ச்சி ஆணைய தலைவராகவும் பணியாற்றினார். கர்நாடக பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராகவும் பணியாற்றி உள்ளார். ஆனால் அவருக்கு கன்னட இலக்கியம் மீது மிகுந்த பற்று இருந்தது. நெருக்கடி நிலை காலத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயண் விடுத்த வேண்டுகோளை ஏற்று போராட்டம் நடத்தி சிறை வாசம் அனுபவித்தார்.

அவர் தற்போது பெங்களூருவில் வசித்து வந்தார். வயோதிகம் காரணமாக நோய்வாய்ப்பட்ட அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மந்திரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அஞ்சலி செலுத்தினர்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா ஆகியோர் சாம்ராஜ்பேட்டையிலை் உள்ள சாகித்ய பரிஷத் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சந்திரசேகர் பட்டீலின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். கர்நாடக சாகித்ய அகாடமி, ராஜ்யோத்சவா உள்பட பல்வேறு விருதுகளை அவர் பெற்றார். கர்நாடகத்தில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ‘பம்ப' விருதையும் அவர் பெற்றார். அவரை ‘சம்பா' என்று சுருக்கமாக அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்