கைதான பஞ்சாயத்து தலைவியின் கணவரை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்

திசையன்விளை அருகே மணல் திருட்டு வழக்கில் கைதான பஞ்சாயத்து தலைவியின் கணவரை விடுவிக்கக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-10 21:07 GMT
திசையன்விளை:
திசையன்விளை அருகே கஸ்தூரிரெங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலன் என்ற பாலசுப்பிரமணியன். முன்னாள் பஞ்சாயத்து செயலாளர். இவருடைய மனைவி வாழவந்த கணபதி, கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் அரசு புறம்போக்கு நிலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் முறைகேடாக மணல் திருடியதாக பாலசுப்பிரமணியன், பொக்லைன் ஆபரேட்டர் சிவகுமார் ஆகிய 2 பேர் மீதும் திசையன்விளை போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன், சிவகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கைதான 2 பேரையும் விடுவிக்க வலியுறுத்தியும் நேற்று காலையில் கஸ்தூரிரெங்கபுரத்தில் கிராம மக்கள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜமால் (திசையன்விளை), செல்வி (உவரி), துணை தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்