மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-01-10 20:49 GMT
மேட்டூர், 
மேட்டூர் அணை
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை படிப்படியாக குறைந்தது.
ஒரு கட்டத்தில் தண்ணீர் தேவை முற்றிலும் இல்லாமல் போனது. இதனால் கடந்த அக்டோபர் மாதம் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் மாதம் 25-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு மீண்டும் தண்ணீர் தேவை ஏற்பட்டது.
 இதையடுத்து அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது. டெல்டா பாசன பகுதிகளில் மீண்டும் மழை பெய்ததால் டிசம்பர் மாதம் 31-ந் தேதி முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியாக குறைக்கப்பட்டது. 
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
தற்போது டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு நேற்று மதியம் முதல் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,000 கனஅடியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 116.59 அடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்