செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட அப்பளங்கள் அழிப்பு
நெல்லையில் அப்பள கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது செயற்கை நிறமி சேர்க்கப்பட்ட அப்பளங்கள் அழிக்கப்பட்டது.
நெல்லை:
சென்னை உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் செந்தில்குமார் உத்தரவுப்படி, நெல்லை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா மேற்பார்வையில், பாளையங்கோட்டை மண்டல பகுதியில், உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் ஊழியர்கள் அப்பள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். தினசரி மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் கலர் அப்பளம், குடல் அப்பளம், கலர் வத்தல் போன்றவை விற்பனை செய்யப்படுகிறதா? என ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது அதிகளவில் செயற்கை நிறமிகள் கலந்த கலர் வத்தல் ஒரு கிலோ, அரை கிலோ கலர் அப்பளம், குடல் வத்தல் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும் கலர் வத்தல், சீவல் போன்றவற்றின் மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சசிதீபா கூறியதாவது:-
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகளில் தொடர்ந்து திடீர் ஆய்வு நடத்தப்படும். பொதுமக்கள் அதிக அளவில் செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டாம். அதனை தொடர்ந்து சாப்பிடுவதால், வயிற்றில் புற்றுநோய் உருவாகும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே அதிகளவில் செயற்கை நிறமிகள் சேர்த்த உணவுகள் விற்பனை செய்யப்பட்டால், அது பற்றிய புகாரை 94440 42322 என்ற எண்ணில் வாட்ஸ்-அப், குறுந்தகவல், வாய்ஸ் மெசேஜ் மூலம் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.