ஊர்க்காவல் படைவீரர் தூக்குப்போட்டு சாவு

நெல்லையில் ஊர்க்காவல் படை வீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-10 20:10 GMT
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 35). இவர் ராமையன்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். மேலும் நெல்லை ஊர்க்காவல் படையிலும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அர்ஜூனன் வீட்டில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தச்சநல்லூர் போலீசார் விரைந்து சென்று, அர்ஜூனனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அர்ஜூனனுக்கும், அவருடன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனுக்கும் (23) இடையே பணம் கொடுக்கல்- வாங்கலில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக அர்ஜூனனின் வீட்டுக்கு சென்று மாரியப்பன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் அர்ஜூனனுக்கு 2 முறை திருமணம் நடந்து, மனைவிகள் பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதுகுறித்தும் அவர் கேலி செய்ததாக தெரிகிறது. இதில் மனமுடைந்த அர்ஜூனன் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக மாரியப்பனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்