தென்காசியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

தென்காசியில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.;

Update: 2022-01-10 20:04 GMT
தென்காசி, ஜன:
ஏற்கனவே இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. தென்காசி மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை  கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் கோபால சுந்தரராஜ் தொடங்கி வைத்தார். சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. முதன்முதலாக இதனை செலுத்திக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தனுஷ்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பழனி நாடார், ராஜா, தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் உதய கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் வெங்கட்ரெங்கன், துணை இயக்குனர் (பொறுப்பு) டாக்டர் போஸ்கோ ராஜ், தென்காசி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தென்காசி மாவட்டத்தில் முதல் தவணையாக தற்போது 4 ஆயிரத்து 38 பேருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள், சுகாதாரத்துறையில் உள்ள களப்பணியாளர்கள், நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள், சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேல் இணை நோய்களுடன் உள்ளவர்கள் ஆகியோருக்கு செலுத்தப்படுகிறது.
இந்த தடுப்பூசி செலுத்த முன்பதிவு தேவையில்லை. அருகிலுள்ள சுகாதார நிலையங்களில் ஆதார் கார்டு மற்றும் செல்போன் எண்ணுடன் சென்று செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்