திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. கலெக்டர் அமர்குஷ்வாஹா முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனைத் தொடந்து கலெக்டர் முன்னிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையாபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, மாவட்ட வழங்கல் அலுவலர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மாவட்டத்தில் வருவாய் துறையில் 474 பணியாளர்கள், காவல்துறையில் 605 பேர், ஊரக வளர்ச்சித் துறையில் 3,106 பேர், நகராட்சி பணியாளர்கள் 1,383 பேர் என 15 துறைகளை சார்ந்த 16,840 பணியாளர்களில் தகுதியானவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. முதல் நாளான நேற்று 500 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
தனித்துணை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பானுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.