3 மாத சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 3 மாத சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-10 19:34 GMT
அடுக்கம்பாறை

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 3 மாத சம்பளம் வழங்கக்கோரி பயிற்சி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளம் கேட்டு கோரிக்கை

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 ஆண்டுகளுக்குமேல் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். தற்போது மருத்துவமனையில் சுமார் 100 பயிற்சி மருத்துவர்கள் பணியில் உள்ளனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக பயிற்சி ஊதியம் வழங்கப்படவில்லை. 

மேலும் கொரோனா ஊக்கத்தொகை மற்றும் ஜூலை மாத சம்பள நிலுவை ஆகியவை 50 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 3 மாதங்களாக பயிற்சி டாக்டர்கள் சம்பளம் கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களுக்கான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை, எனக் கூறப்படுகிறது.

பணியை புறக்கணித்து போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த பயிற்சி டாக்டர்கள் அனைவரும் நேற்று காலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு திரண்டு சம்பளம் வழங்க கோரி கோஷமிட்டனர். 

தகவல் அறிந்ததும் கல்லூரி டீன் செல்வி மற்றும் மருத்துவ அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சமாதானம் அடையாத பயிற்சி டாக்டர்கள் கல்லூரியின் கலையரங்க அறையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் கூறியதாவது:-

ஏன் வழங்க வில்லை?

எங்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 பயிற்சி ஊதியமாக வழங்கப்படுகிறது. 3 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. கொரோனா ஊக்கத் தொகை ரூ.15 ஆயிரத்துக்கு பதில் ரூ.7 ஆயிரம் மட்டுமே வழங்குகின்றனர். அதேபோல் ஜூலை மாத சம்பளம், அரியர் பணமும் குறைந்த அளவே வழங்கி உள்ளனர். 
மற்ற மருத்துவக் கல்லூரிகளில் முறையாக சம்பளம் வழங்கும்போது இங்கு மட்டும் ஏன் வழங்கப்படவில்லை? என்பது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முறையான சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரபரப்பு
பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தால் நேற்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவல் காலத்தில் பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பது மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம் தொடரும்

போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவர்கள் நேற்று மாலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அங்கு அவர்களிடம் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மருத்துவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். அப்போது கலெக்டர் அவர்களிடம் கூறுகையில், உங்களது கோரிக்கை குறித்து ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உங்களுக்கான ஊதியம் வழங்கப்படும் என்றார்.

அப்போது மருத்துவர்கள், எங்களுக்கு உத்தரவாதம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர் உத்தரவாதம் வழங்கப்படாது. ஆனால் கோரிக்கை குறித்து நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மருத்துவர்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவாதம் தரப்படவில்லை. ஓரிரு நாட்களில் ஊதியம் தருவதாக தெரிவித்துள்ளனர். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

மேலும் செய்திகள்