சங்க அலுவலகத்தில் வெடிகுண்டு வீச்சு

குலசேகரம் அருகே நாயர் சேவா சங்க அலுவலக வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2022-01-10 18:26 GMT
குலசேகரம்:
குலசேகரம் அருகே நாயர் சேவா சங்க அலுவலக வாசலில் நாட்டு வெடிகுண்டை வீசிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
சங்க அலுவலகம்
குலசேகரம் அருகே உள்ள அண்டூர்புல்லை என்ற இடத்தில் என்.எஸ்.எஸ். கரயோகம் எனப்படும் நாயர் சேவா சங்க அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8.15 மணிக்கு சங்க தலைவர் கிருஷ்ண பிரசாத், செயலாளர் ராஜூ, பொருளாளர் ரவி உள்பட சிலர் அமர்ந்து கணக்குகளை சரி பார்த்து கொண்டிருந்தனர். 
அப்போது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சங்க அலுவலக வாசலில் ஒரு நாட்டு வெடிகுண்டை வீசியதாக தெரிகிறது. அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் புகை மண்டலம் ஏற்பட்டது. மேலும் வெடிப்பொருளின் துகள்கள் அலுவலகத்தின் உள் பகுதியில் விழுந்தது. 
2 பேர் தப்பி ஓட்டம்
இதனால் அலுவலகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது அதே பகுதியை  சேர்ந்த 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி செல்வதை கண்டனர். வெடி சத்தம் கேட்டதும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
இந்த சம்பவம் குறித்து சங்க தலைவர் கிருஷ்ண பிரசாத் தலைமையில் சுமார் 50 பேர் திரண்டு குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் தங்களை கொலை செய்யும் நோக்கத்தில் நாட்டு வெடி குண்டை வீசி சென்றதாக கூறியுள்ளனர். இதுகுறித்து குலசேகரம் போலீசார் விசாரணை நடத்தி தப்பி சென்ற 2 வாலிபர்களை தேடி வருகிறார்கள். 
நாயர் சேவா சங்க அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

மேலும் செய்திகள்