நெல்நாற்று நடவு செய்த சிறுவர்-சிறுமிகள்

மங்கலம் அருகே சிறுவர்-சிறுமிகள் நெல்நாற்று நடவு செய்தனர்.

Update: 2022-01-10 18:15 GMT
மங்கலம்
மங்கலம் அருகே சிறுவர்-சிறுமிகள் நெல்நாற்று நடவு செய்தனர்.
விவசாயம் 
இயற்கை சீற்றம், நோய், பூச்சித்தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயத்தொழில் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக விவசாய தொழிலை மேற்கொள்ள எதிர்வரும் தலைமுறையினர் முன்வருவார்களா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. விவசாயம் என்றால் ஓடி ஒளிந்து கொள்ளும் காலமிது. விவசாயம் செய்தால் நஷ்டம் தான் ஏற்படும். லாபம் கிடைக்க வாய்ப்பே இல்லை. எனவே இளைஞர்கள் வேறு தொழிலுக்கு சென்று விட்டனர். இதனால் வரும்காலம் விவசாயம் கேள்விக்குறியாகும் வாய்ப்பு உள்ளது. இது ஒருபுறம் இருக்க விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியும் முன்னெடுக்கப்படுகிறது. 
இந்த நிலையில்  மங்கலத்தை அடுத்த கிடாத்துறைபுதூர் கிராமத்தில் இளம் தலைமுறையினர் நாற்று நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தனியார் அறக்கட்டளை சார்பில் செய்யப்பட்டிருந்தது. முன்னதாக சிறுவர்கள், சிறுமிகள் நாற்று நடவு செய்வதற்கு ஏதுவாக வயல்கள் தயார் செய்யப்பட்டிருந்தது. மூத்த பெண் தொழிலாளி ஒருவர் அறிவுறுத்த அதற்கேற்ப போதிய இடைவெளியுடன் சிறுவர், சிறுமிகள் நெல் நாற்றுக்களை நடவு செய்தனர்.நடவு செய்யும்போது பாரம்பரிய பாடல்களை பாடியும், குலவை எழுப்பியும் சிறுவர், சிறுமிகளை உற்சாகப்படுத்தினர்.
பெற்றோர் வியப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் “ நமது நாட்டில் விவசாய தொழில் என்பது மிகவும் பாரம்பரியமிக்கது. சேற்றில் கால் வைத்தால்தான் நாம் அனைவரும் சோற்றில் கை வைக்க முடியும். பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் விவசாய தொழில் நடந்துவருகிறது. நாம் உண்ணும் ஒவ்வொரு அரிசியிலும் நமது பெயர் உள்ளது என முன்னோர்கள் கூறுவார்கள். 
அப்படிப்பட்ட அரிசிஎவ்வாறு விளைவிக்கப்படுகிறது என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என சிறுவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றனர். சிறுவர், சிறுமிகள் நாற்று நடவு செய்ததை பெற்றோர்கள் வியந்து பார்த்தனர்.

மேலும் செய்திகள்