கல் குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
மடத்துக்குளம் அருகே கல் குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
திருப்பூர்
மடத்துக்குளம் அருகே கல் குவாரிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தொலைபேசி மூலம் புகார்
கொரோனா பரவல் காரணமாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெறவில்லை. பொதுமக்கள் தங்கள் புகார்களை தொலைபேசி மூலமாக தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்தார். அதன்படி 97000 41114 என்ற செல்போன் எண்ணில் தெரிவித்தனர்.
இருப்பினும் பொதுமக்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களின் வசதிக்காக கலெக்டர் அலுவலகம் முன் பெட்டி வைக்கப்பட்டு அந்த பெட்டியில் மனுக்களை பொதுமக்கள் போட்டனர். மனுக்களை ஊழியர்கள் எடுத்து பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தனர்.
கல்குவாரிக்கு எதிர்ப்பு
அந்தவகையில் மடத்துக்குளம் சாலரப்பட்டியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், பாப்பான்குளம் கிராமம் சாலரப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது. இந்த கல்குவாரியை அமைப்பதற்கு சுற்றியுள்ள விவசாயிகளிடம் ஆட்சேபனையின்மை கடிதம் பெறப்படவில்லை. விவசாய கிணறுக்கும், கல் குவாரிக்கும் இடையிலான தூரம் 100 மீட்டர் உள்ளது. இதனால் கிணற்று நீர் வற்றும் நிலை ஏற்படும். கல் குவாரியில் வெடி வைத்து உடைக்கும்போது பாறைகள் விவசாய நிலங்களில் விழுந்து பயிர்களை பாதிக்கிறது. விதிமீறி செயல்படும் கல் குவாரியை ஆய்வு செய்து உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கல்குவாரி உரிமையாளர்களுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.