நாமக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து ஏறுமுகம்; ஒரேநாளில் 109 பேருக்கு கொரோனா-பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏறுமுகமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல்:
109 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 54 ஆயிரத்து 870 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரின் பெயர் பிற மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது.
இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 54 ஆயிரத்து 864 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மேலும் 109 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 973 ஆக அதிகரித்து உள்ளது.
கொரோனா ஏறுமுகம்
மாவட்டத்தில் நேற்று 43 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 54 ஆயிரத்து 117 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 520 பேர் உயிரிழந்த நிலையில், 336 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் 87 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில் நேற்று 109 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அதிர்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்றால் 50-க்கும் குறைவானவர்களே பாதிக்கப்பட்டு வந்தனர். தற்போது இந்த ஆண்டு முதல்முறையாக கொரோனா தொற்றால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனாவின் கோரமுகம் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.