கந்தம்பாளையம் அருகே தனியார் பள்ளியில் காவலாளி மர்ம சாவு
கந்தம்பாளையம் அருகே தனியார் பள்ளியில் காவலாளி மர்மமாக இறந்து கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கந்தம்பாளையம்:
காவலாளி
கந்தம்பாளையம் அருகே உள்ள சித்தாளந்தூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் மணியாரன் (வயது 65). இவர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். மேலும் தோட்ட பராமரிப்பு வேலையும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறை முன்பு நெற்றி, மூக்கில் ரத்த காயத்துடன் கிடந்தார். அவரை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தனர். பின்னர் மணியாரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மர்ம சாவு என வழக்குப்பதிவு செய்து அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது தவறி விழுந்து இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.