குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க புகார் பெட்டி
குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனுக்களை அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டது.
கரூர்,
குறைதீர்க்கும் கூட்டம் ஒத்தி வைப்பு
கரூரில் திங்கட்கிழமை தோறும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்ஒருபகுதியாக திங்கட்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயிலில் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்க புகார் பெட்டி வைக்கப்பட்டிருந்தது.
இதில் பொதுமக்கள் தங்களது புகார் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர். மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய மணல்குவாரி
புகார் பெட்டியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் சார்பில் போடப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- காவிரி ஆற்றில் தற்போது மிக அதிகமான மருத்துவ கழிவுகள் இருப்பதாக ஐ.ஐ.டி. ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் மணல் குவாரிகள் அமைப்பதால், பெயரளவில்தான் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று இருக்குமே தவிர வேளாண்மை முழுமையாக அழிக்கப்பட்டு டெல்டா பாலைவனமாக்கப்பட்டு, அதன்பின்பு மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை நடைமுறைப்படுத்த தாரை வார்க்கும் செயலாக இருக்கும் என்பதால், வெளிநாட்டு ஆற்று மணல் இறக்குமதிக்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கும்போது அவசியமில்லாமல், காவிரி, கொள்ளிடம் உள்ளிட்ட தமிழக ஆறுகளில் மணல் குவாரிகளை அமைக்க கூடாது. புதிய மணல்குவாரி அமைப்பது தொடர்பாக தமிழக அரசின் முடிவை மாற்றி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.