இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டம்

தாராபுரம் அருகே அமைய உள்ள தனியார் இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-10 17:19 GMT
திருப்பூர்
தாராபுரம் அருகே அமைய உள்ள தனியார் இரும்பு ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சுற்றுப்புற பகுதியை சேர்ந்த கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காத்திருப்பு போராட்டம்
தாராபுரம் தாலுகா சங்கராண்டம்பாளையம், சிறுகுணறு, சூரியநல்லூர், கொழுமங்குழி, கண்ணாங்கோவில் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் தலைமையில் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வடுகபாளையத்தில் தனியார் இரும்பு ஆலை அமைத்தால் சுற்றுப்புற பகுதிகளில் காற்று, நீர் மாசுபடும். இதனால் வேளாண்மையும், கால்நடை வளர்ப்பும் கடுமையாக பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். இதுகுறித்து கலெக்டர், தாராபுரம் ஆர்.டி.ஒ., தாசில்தார் ஆகியோரிடம் மனு கொடுத்து முறையிட்டோம். மேலும் தனியார் இரும்பு ஆலை கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தக்கோரி முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆவணங்கள்
அப்போது தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது தனியார் இரும்பு ஆலை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கை நகல், நிறுவனம் அமைய உள்ள வேளாண் நிலத்தை தரிசு நிலமாக மாற்றப்பட்டு அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை தர வேண்டும் என்று ஆர்.டி.ஓ. உத்தரவிட்டும் தனியார் நிறுவனம் இதுவரை ஆவணங்களை தரவில்லை.
இந்தநிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனம் மேற்கண்ட விவரங்களை மறைத்து சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று காவல்துறையின் பாதுகாப்பு உத்தரவு பெற்றுள்ளது. மேலும் அந்த நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது. இதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு இறுதி அறிக்கை, வேளாண் நிலத்தை தரிசு நிலம் என வகைப்பாடு செய்ததற்கான விண்ணப்பம் மற்றும் இணைக்கப்பட்ட ஆவணங்களை எங்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.
போராட்டம் தொடர்ந்தது
இதுதொடர்பாக முக்கிய பிரதிநிதிகள் மட்டும் கலெக்டர் வீனித்தை சந்தித்து பேசினார்கள். இருப்பினும் நேற்று மாலை வரை காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. கலெக்டர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.
காத்திருப்பு போராட்டம் இரவு 8 மணி வரை தொடர்ந்தது. அதன்பிறகு கலெக்டர் அலுவலகம் முன் மறியல் செய்ய அவர்கள் திரண்டனர். இதைத் தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். உரிய ஆவணங்களை இன்று (செவ்வாய்க்கிழமை) வழங்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்