பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகராட்சி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் பணி அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கேபன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-10 17:19 GMT
தர்மபுரி:
பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணியை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி வைத்தார்.
குடிநீர் வழங்கும் பணி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் மற்றும் பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகராட்சி பகுதிக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணி தொடக்க விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன், நகராட்சி ஆணையர் சித்ரா சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கொரோனா பரவல் தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து தர்மபுரி நகராட்சி பகுதி பொதுமக்களுக்கு மீண்டும் குடிநீர் வழங்கும் பணியை அமைச்சர் தொடங்கி வைத்தார். தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பாதித்தோர் பராமரிப்பு தனிமைப்படுத்தும் மையத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன் கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நீண்ட நாள் கோரிக்கை
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
தர்மபுரி நகராட்சி பகுதி மக்களுக்கு பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டம் கடந்த 1976-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டது. பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, பாலக்கோடு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அதியமான்கோட்டை முதல் ஓசூர் நகரம் வரை புதிய 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெறுவதாலும், பிரதான குடிநீர் குழாய்களில் ஆங்காங்கே உடைப்பு மற்றும் நீர்மூழ்கி மின் மோட்டார்கள் பழுது ஆகிய காரணங்களாலும் கடந்த 3 ஆண்டுகளாக சின்னாறு அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை.
இதனால் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் உரிய சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது தர்மபுரி நகராட்சி பகுதிக்கு பஞ்சப்பள்ளி குடிநீர் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தர்மபுரி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. 18 வார்டுகளை சேர்ந்த 37,800 பொதுமக்கள் இதன் மூலம் பயன் பெறுவார்கள்.
பூஸ்டர் தடுப்பூசி
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 464 படுக்கைகளும், ஆக்சிஜன் வசதி இல்லாத 2,550 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் இதுவரை 9,15,861 பேருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசியும், 5,75,257 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றி உரிய ஒத்துழைப்பு அளித்தால் முழு ஊரடங்கை சந்திக்கும் நிலை ஏற்படாமல் தடுக்க முடியும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன், முன்னாள் எம்.பி. எம்.ஜி.சேகர், உதவி கலெக்டர் முத்தையன், நலப்பணிகள் இணை இயக்குனர் மலர்விழி வள்ளல், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் அமுதவல்லி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், மாநில வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் தர்மசெல்வன், நகர பொறுப்பாளர் அன்பழகன் உள்பட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்