பர்கூரில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
பர்கூரில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பர்கூர்:
பர்கூரில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
பூஸ்டர் டோஸ் தடுப்பூசி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. பர்கூர் அரசு மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி 8 ஆயிரத்து 459 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சிக்கு மதியழகன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மைய வார்டில் 350 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் மதியழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆண்கள் தங்கும் விடுதி, பெண்கள் தங்கும் விடுதியில் கொரோனா சிகிச்சைக்காக வருபவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள படுக்கை உள்ளிட்ட வசதிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
மேலும் கொரோனா சிகிச்சை மையத்தையும், சுற்றுபுறத்தையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் பொருத்தப்பட்ட படுக்கை வசதிகள் அமைக்க வேண்டும் என டாக்டர்கள், அலுவலர்களுக்கு கலெக்டர் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின்போது நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், துணை கலெக்டர் (பயிற்சி) அபிநயா, பர்கூர் அரசு மருத்துவமனை மருத்துவர் எழிலரசி, தாசில்தார் பிரதாப், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்னபூரணி, வெங்கடேசன் மற்றும் சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.