திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுைக
தனியார் சிலிகேட் நிறுவனத்தை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
தனியார் சிலிகேட் நிறுவனத்தை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் சிலிகேட் நிறுவனம்
திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடி கிராமத்தில் தனியார் சிலிகேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வெள்ளக்குடி கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர்.
நாளடைவில் அதிக அளவில் எந்திரங்களை கொண்டும், வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியும் ஈடுபட்டதால், இந்த நிறுவனத்தில் அந்த பகுதி கிராம மக்கள் வேலை வாய்ப்பினை இழந்தனர். கிராம மக்களுக்கு அதிக அளவில் வேலை வழங்க வேண்டும் என கூறி வெள்ளக்குடி கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர்.
முற்றுகை
இந்நிலையில் நேற்று தனியார் சிலிகேட் நிறுவனத்தை கண்டித்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தை வெள்ளக்குடி கிராமமக்கள் முற்றுகையிட்டு தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டவைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருவாரூர் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் வழங்கி தீர்வு பெறுங்கள் என அவர்களிடம் வலியுறுத்தினர். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.