கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் கலெக்டர் வெளியிட்டார்

கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் மோகன் வெளியிட்டார்.

Update: 2022-01-10 17:09 GMT
விழுப்புரம், 

வாக்காளர் பட்டியல் வெளியீடு

விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த கோட்டக்குப்பம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து இந்நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்காக புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை கலெக்டர் மோகன் வெளியிட்டார்.

23,673 வாக்காளர்கள்

அப்போது அவர் கூறுகையில், கடந்த 1.11.2021 நாளிட்ட ஒருங்கிணைந்த சட்டமன்ற வாக்காளர் பட்டியல்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய கால அட்டவணையின்படி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாக்காளர் பட்டியலின்படி கோட்டக்குப்பம் நகராட்சியில் 11,581 ஆண் வாக்காளர்களும், 12,090 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 2 பேரும் ஆக மொத்தம் 23,673 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் கோட்டக்குப்பம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராமகிருஷ்ணன், தி.மு.க. கோட்டக்குப்பம் நகர செயலாளர் ஜெயமூர்த்தி, விழுப்புரம் நகர அ.தி.மு.க. நகர செயலாளர் ராமதாஸ், துணை செயலாளர் செந்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ், நகர தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைத்தலைவர் ராஜ்குமார், தே.மு.தி.க. நகர செயலாளர் மணிகண்டன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் கலியமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்