ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 18 பேர் கைது

ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-10 16:38 GMT
ஈரோட்டில் ரெயில் மறியலுக்கு முயன்ற இந்து மக்கள் கட்சியினர் 18 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரெயில் மறியல்
பிரதமர் நரேந்திரமோடிக்கு உரிய பாதுகாப்பு அளிக்காத பஞ்சாப் மாநில அரசை கலைக்க கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கட்சியின் மேற்கு மண்டல செயலாளர் முருகேசன் தலைமையில் மாவட்ட தலைவர் பிரகாஷ் மற்றும் கட்சியினர் ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் நேற்று காலை திரண்டனர். அவர்கள் பஞ்சாப் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவித்து கோஷங்களை எழுப்பியவாறு ஈரோடு ரெயில் நிலையம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழைய போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் போராட்டக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 பேர் கைது
இந்த போராட்டத்தில் ராகுல்காந்தி மற்றும் பஞ்சாப் மாநில முதல்-மந்திரியின் புகைப்படங்களை கீழே போட்டு மிதித்து தங்களது எதிர்ப்புகளை வெளிகாட்டினார்கள். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். இதில் மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டார்கள்.
அவர்கள் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தால் ரெயில் நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
------------

மேலும் செய்திகள்