கள்ளக்குறிச்சியில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி முகாம் கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

கள்ளக்குறிச்சியில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்

Update: 2022-01-10 16:32 GMT
கள்ளக்குறிச்சி

தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது:-

முன்கள பணியாளர்கள்

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார். இதையடுத்து மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு(2021) ஜனவரி 16-ந் தேதி முதல் இதுவரை 9 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு முதல் தவணை, 7 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து 15 முதல் 18 வயதுடைய பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இதுவரை 58 ஆயிரத்து 691 மாணவ-மாணவிகளுக்கு அந்தந்த பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

9,800 பேருக்கு தடுப்பூசி

தற்போது கொரோனா தொற்று 3-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்கு முன்னர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட  முன்கள பணியாளர்கள் மற்றும் இணை நோய் உள்ள 9,800 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே கடந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதிக்கு முன்னர் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்கள பணியாளர்கள், தனியார், அரசு சுகாதாரத்துறை பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு 3-வது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. எனவே 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட தகுதியுடைய அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். 

அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, கள்ளக்குறிச்சி நகராட்சி ஆணையார் குமரன், வட்டார மருத்துவ அலுவலர் பங்கஜம் மற்றும் சுகாாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்