பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார்.

Update: 2022-01-10 16:07 GMT
தேனி: 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுகாதார செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் முரளிதரன் தொடங்கி வைத்தார். 

பின்னர், கலெக்டர் கூறுகையில், "தேனி மாவட்டத்தில் 7 லட்சத்து 74 ஆயிரத்து 108 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 72 ஆயிரத்து 340 பேருக்கு 2 தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 

அதுபோல், 15 வயது முதல் 18 வரையுள்ள 41 ஆயிரத்து 753 மாணவ, மாணவிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசியை பொறுத்தவரை முதற்கட்டமாக 3,310 சுகாதார பணியாளர்களுக்கும், 3,179 முன்கள பணியாளர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோயாளிகள் 4,456 பேருக்கும் செலுத்தப்பட உள்ளது" என்றார்.

மேலும் செய்திகள்