சென்னிமலையில் பஸ்புறப்படும் நேரம் தொடர்பாக 2 டிரைவர்களுக்கு இடையே தகராறு
சென்னிமலையில் பஸ்புறப்படும் நேரம் தொடர்பாக 2 டிரைவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
பழனியில் இருந்து காங்கேயம், சென்னிமலை வழியாக ஈரோட்டுக்கு தினமும் காலையில் அரசு பஸ் செல்கிறது. இந்த பஸ் தினமும் காலையில் 7.35 மணிக்கு காங்கேயம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 8 மணி அளவில் சென்னிமலைக்கு வந்து சேரும். அதேபோல் காங்கேயத்தில் இருந்து தினமும் காலை 7.45 மணிக்கு தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்னிமலை, அறச்சலூர் வழியாக ஈரோடு செல்லும். இந்த பஸ் சென்னிமலை பஸ் நிலையத்திற்கு 8.13 மணிக்கு வந்து சேரும்.
ஆனால் நேற்று காங்கேயத்தில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் 10 நிமிடங்கள் தாமதமாக சென்னிமலை பஸ் நிலையத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் தனியார் பஸ் வந்துள்ளது. ஆனால் அரசு பஸ் புறப்படாமல் நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனியார் பஸ் டிரைவர், அரசு பஸ் டிரைவரிடம் 10 நிமிடங்கள் அதிகம் ஆகியும் ஏன் இங்கே பஸ்சை நிறுத்தி இருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதன் காரணமாக 2 பஸ்களின் டிரைவர், கண்டக்டர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்ததும் சென்னிமலை போலீசார் அங்கு சென்றனர். பின்னர் 2 பஸ்களிலும் இருந்த பயணிகளை இறக்கிவிட்டு் பஸ்களை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அதன்பின்னர் பயணிகள் மாற்று பஸ் மூலம் அங்கிருந்து சென்றனர். தொடர்ந்து போலீஸ் நிலையத்தில் 2 டிரைவர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 2 டிரைவர்களும் சமாதானம் அடைந்ததை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு மேல் பஸ்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டது. இதனால் சென்னிமலையில் பெரும் பரபரப்பு நிலவியது.