ஊத்துக்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்த வழக்கில் நர்சுகள் 3 பேர் கைது
ஊத்துக்கோட்டையில் தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை இறந்த வழக்கில் நர்சுகள் 3 பேர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.
பென்னலூர்பேட்டை அருகே உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் காமேஷ் (வயது 35). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி திவ்யா (30). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 4-ந் தேதி ஊத்துக்கோட்டை அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் திவ்யாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. டாக்டர்கள் இல்லாமல் 5 பேர் கொண்ட நர்சுகள் குழு பிரசவம் பார்த்துதால்தான் தன் பெண் குழந்தை இறந்து பிறந்தது என்று காமேஷ் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசார் குழந்தையின் பிரேத பரிசோதனை முடிவுகள் மற்றும் சிறப்பு போலீஸ் குழு விசாரணையின் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் நர்சுகளாக பணிபுரிந்து வரும் மரியா (50), சுகன்யா (28), ரம்யா (24), அருணா மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மரியா, சுகன்யா, ரம்யா ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.