பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபர், போக்சோ சட்டத்தில் கைது
முகநூல் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
வேதாரண்யம்:
முகநூல் மூலம் பழகி பிளஸ்-2 மாணவியை கடத்தி சென்ற வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பிளஸ்-2 மாணவி மாயம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவர் கடந்த 3 மாதத்துக்கு முன்பு வீட்டில் இருந்து திடீரென மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், வேதாரண்யம் போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாணவியின் பெற்றோர், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர்.
வாலிபருடன் இருந்தார்
இதனையடுத்து மாணவியை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த மாணவி ஒரு வாலிபருடன் செம்போடை பஸ் நிறுத்தத்தில் நிற்பதாக வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டா்கள் தனிக்கொடி, வெங்கடாசலம், துரைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மாயமான மாணவியையும், அவருடன் இருந்த வாலிபரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.
முகநூல் மூலம் பழக்கம்
விசாரணையில், மாணவியுடன் இருந்த வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா மேலூரை சேர்ந்த கண்ணன் மகன் சங்கர் (வயது 21), என்பதும், டிரைவரான இவருக்கும், அந்த மாணவிக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த மாணவியை நாகைக்கு வரச் சொல்லி சங்கர் அவரை கடத்தி சென்றுள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திருமணம் செய்ய முடியாது என கூறிய சங்கர், அந்த மாணவியை அவரது சொந்த ஊருக்கு அழைத்து வந்ததும் தெரிய வந்தது.
போக்சோ சட்டத்தில் கைது
இதையடுத்து போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சங்கரை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அந்த மாணவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.