பூத்துக்குலுங்கும் கொத்தமல்லி செடிகள்
நெகமம் பகுதியில் கொத்தமல்லி செடிகள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.;
நெகமம்
நெகமம் பகுதியில் கொத்தமல்லி செடிகள் பூத்துக்குலுங்குகின்றன. இதனால் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கொத்தமல்லி சாகுபடி
சைவம் என்றாலும், அசைவம் என்றாலும் உணவில் நிச்சயம் கொத்தமல்லிக்கு இடம் உண்டு. உடல் ஆரோக்கியத்துக்கு மிகுந்த பயனை தரும் கொத்தமல்லி, கோவை மாவட்டம் நெகமம் அருகே ஜோத்தம்பட்டி, மூலனூர், காட்டம்பட்டி, காட்டம்பட்டி புதூர், தாசநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலத்தில் பல ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரும்பாலான களிமண் நிலத்தில் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது. மழைக்கு முன்பு ஈரப்பதம் நிலவும்போது நிலத்தை உழுது கொத்தமல்லி சாகுபடி செய்யப்படும். அதன்பிறகு மழை தீவிரமடைந்ததும், செழித்து வளர ஆரம்பிக்கும்.
களிமண் நிலம்
இதைத்தொடர்ந்து மழை இல்லாவிட்டாலும், மண்ணில் உள்ள ஈரப்பதத்தை கொண்டே கொத்தமல்லி வளரும். இதற்கு காரணம், களிமண் நிலத்தில் மழை பெய்தால், அந்த ஈரம் காய்வதற்கு பல நாட்கள் ஆகும்.
அந்த நிலத்தில் கொத்தமல்லி சாகுபடி செய்வதால், மழை இல்லாத நேரத்திலும் வளர்ச்சி குறையாது. கொத்தமல்லி செடி பூத்து காய்க்க தொடங்கியதும், தழைகள் பழுக்க ஆரம்பித்து விடும். காய்கள் முற்றிய பிறகு அறுவடை செய்து, விதை மல்லி பிரித்து எடுக்கப்படுகிறது.
350 கிலோ வரை மகசூல்
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஒரு ஏக்கரில் சாகுபடி செய்ய சுமார் 5 கிலோ முதல் 6 கிலோ வரை கொத்தமல்லி விதை தேவைப்படும். விதைப்பு பணிக்கு முன்பு மண்ணில் அடி உரம் போடப்படுகிறது.
அதன்பிறகு பெரும்பாலும் உரமோ அல்லது பூச்சிக்கொல்லி மருந்தோ பயன்படுத்துவது மிகவும் குறைவு. இயற்கையான காலநிலையிலேயே கொத்தமல்லி வளர்ந்து அறுவடைக்கு தயாராகி விடும்.நல்ல விளைச்சல் உள்ள சமயத்தில் ஒரு ஏக்கருக்கு சுமார் 250 கிலோ முதல் 350 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நறுமணம் வீசுகிறது
தற்போது நெகமம் பகுதியில் பயிரிடப்பட்டு உள்ள கொத்தமல்லி செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இதனால் மகசூல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எப்போதும் உணவு வகைகளுக்கு கொத்தமல்லி தழைகள் மிகுந்த நறுமணத்தை கொடுக்கும். இதேபோன்று விளைநிலத்தில் பூத்துக்குலுங்கும் கொத்தமல்லி செடிகள் நறுமணத்தை வீசுகிறது. இது அந்த வழியாக செல்வோரை கவர்ந்து இழுக்கும் வகையில் உள்ளது.