குடியிருப்பு பகுதியில் காட்டுயானை உலா

ஆழியாறில் குடியிருப்பு பகுதியில் காட்டுயானை உலா வருவதால், மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

Update: 2022-01-10 14:46 GMT
பொள்ளாச்சி

ஆழியாறில் குடியிருப்பு பகுதியில் காட்டுயானை உலா வருவதால், மலைவாழ் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

காட்டுயானை நடமாட்டம்

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பொழிவு குறைந்து விட்டது. இதன் காரணமாக பொள்ளாச்சி அருகே ஆழியாறு அணைக்கு வனவிலங்குகள் தாகம் தீர்க்க வருகின்றன. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக ஆழியாறு சின்னாறுபதியில் உள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிக்கு காட்டு யானை ஒன்று வருகிறது.

மலைவாழ் மக்கள் அச்சம்

இதனால் அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் குழந்தைகளை அழைத்துக் கொண்டு உயரமாக உள்ள இடங்களில் குழந்தைகளுடன் இரவு நேரங்களில் விடிய, விடிய உள்ளனர். 

மேலும் யானைகள் வராமல் இருக்க வீடுகள் முன் தீமுட்டி குடியிருப்புக்குள் வராமல் கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் குடியிருப்புக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணி நேரமும் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் யானையை அவ்வப்போது வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
வனப்பகுதியை விட்டு ஆழியாறுக்கு வந்த ஒற்றை யானை குரங்கு நீர்வீழ்ச்சி, சின்னாறுபதி பகுதியில் சுற்றி திரிந்து வருகிறது. யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் வால்பாறை ரோட்டில் வாகனங்களில் ரோந்து சென்று யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. 

சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வால்பாறை ரோட்டில் வாகனங்களில் கவனமாக செல்ல வேண்டும். யானையை பார்த்தால் அருகில் செல்வது, செல்பி புகைப்படம் எடுப்பது மற்றும் விரட்ட கூடாது. யானையை தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்