காட்டு யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்
காட்டு யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள்
கோவை
மருதமலை அடிவாரத்தில் சுற்றித்திரியும் காட்டு யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது. இது வன ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிளாஸ்டிக் கழிவுகள்
கோவையை மருதமலை வட்டார வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளன. அவை அவ்வப்போது உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருகின்றன.
அப்போது காட்டு யானைகள், அந்த பகுதியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு உள்ளிட்டவற்றை சாப்பிடுவதாக தெரிகிறது.
இந்த நிலையில் மருதமலை மலையடிவாரத்தில் காட்டு யானைகளின் சாணம் கிடந்தது.
அதில் 300 கிராம் அளவிற்கு பிளாஸ்டிக் கழிவுகள், பால்கவர், பிஸ்கட் கவர், முகக்கவசம் போன்றவை இருந்தன. இதை பார்த்த வன ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து வன ஆர்வலர் முருகானந்தம் கூறியதாவது
உயிருக்கு ஆபத்து
சோமையம்பாளையம் ஊராட்சி சார்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மருதமலை அடிவார பகுதியில் குப்பை மேடு தொடங்கப்பட் டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பயன் அளிக்க வில்லை.
இந்த குப்பை மேடுகளில் கிடக்கும் பொருட்களை யானைகள் உணவாக சாப்பிட்டன.
பிளாஸ்டிக் கழிவுகளை யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் சாப்பிட்டால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்க முயன்றோம்.
தற்போது யானைகளின் சாணத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது. பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதால் யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.
எனவே யானைகளை காப்பாற்றவும், குப்பை மேட்டை இடமாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம், வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மருதமலை சுற்றுவட்டாரத்தை பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தரம் பிரிக்கிறோம்
சோமையம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் கூறும் போது, காழ்ப்புணர்ச்சியோடு சிலர் புகார் கூறுகிறார்கள்.
இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை கடந்த 10 நாட்களாக தரம் பிரித்து வருகிறோம் என்றார்.
இது குறித்து மாவட்ட வன அதிகாரி அசோக்குமார் கூறும் போது, யானை வழித்தடத்தில் குப்பைமேடு இருப்பதால் அதை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் தெரிவிப்போம்.
மேலும் மருதமலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.