பொதுஇடங்களுக்கு செல்பவர்கள் 2 முகக்கவசம் அணிய வேண்டும்
பொதுஇடங்களுக்கு செல்பவர்கள் 2 முகக்கவசம் அணிய வேண்டும்;
கோவை
கொரோனா பரவலை தடுக்க பொதுஇடங்களுக்கு செல்பவர்கள் 2 முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பூஸ்டர் தடுப்பூசி பணியை தொடங்கி வைத்து கலெக்டர் சமீரன் கூறினார்.
முன்னோடி மாவட்டம்
முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 'பூஸ்டர்' எனப்படும் 3-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கோவை அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் சமீரன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது
கோவை மாவட்டத்தில் 2022-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புபடி 38 லட்சத்து 67 ஆயிரம் பேர் உள்ளனர்.
இதில் தடுப்பூசி செலுத்த 27 லட்சத்து 90 ஆயிரம் பேர் தகுதியானவர்கள்.
இதில் 27 லட்சத்து 51 பேர் முதல் தவணையும், 22 லட்சத்து 84 ஆயிரம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
அதாவது 96.7 சதவீதம் பேர் முதல் தவணையும், 80 சதவீதம் பேர் 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தி, மாநில அளவில் கோவை முன்னோடி மாவட்டமாக உள்ளது.
பூஸ்டர் தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயது வரை உள்ள ஒரு லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 85 ஆயிரத்து 554 சுகாதார பணியாளர்கள், 96 ஆயிரத்து 762 முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட 72 ஆயிரம் பேர் என 2 லட்சத்து 49 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்படும். வருகிற ஜனவரி மாத இறுதிக்குள் 70 ஆயிரம் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தற்போது கொரோனா 3-வது அலையாக வேகமாக பரவி வருகிறது. இதை எதிர்கொள்ள கோவை மாவட்டத்தில் மொத்தம் 9,800 படுக்கை தயார் நிலையில் உள்ளது.
மேலும் கொரோனா மையங்களில் 4300 படுக்கை, 5 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கையும் தயார் நிலையில் உள்ளது.
2 முகக்கவசம்
அரசு ஆஸ்பத்திரியில் டீன் உள்பட மருத்துவ பணியாளர்கள் ஆர்வமுடன் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
பொது இடங்களுக்கு செல்லும் போது பொதுமக்கள் 2 முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
அரசு பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் வழித் தடங்களில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்.
முகக் கவசம் அணியாதவர்கள் பஸ்சில் பயணிக்க அனுமதி கிடையாது. 100 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்த முயற்சி எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.