முதியவர் கொலையில் வாலிபர் கைது

சாயர்புரம் அருகே முதியவர் கொலையில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-01-10 13:16 GMT
சாயர்புரம்:
சாயர்புரம் அருகே முதியவர் ெகாலையில், வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

முதியவர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள பெருங்குளம் உடையடியூரை சேர்ந்தவர் நாகபத்திரன் (வயது 66). இவருக்கு சொந்தமான மாடுகளை காணவில்லை. அதை தேடியபோது சாயர்புரம் அருகே உள்ள நட்டாத்தி - மீனாட்சிபட்டி ரோட்டில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்ததை அறிந்தார்.
இதைத்தொடர்ந்து மாடுகளை அழைத்து வருவதற்காக நேற்று முன்தினம் நாகபத்திரன் சைக்கிளில் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் மீனாட்சிபட்டி சாலையோரத்தில் அவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

போலீஸ் தனிப்படை
இதுகுறித்து சாயர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை நடந்த இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். அவரது உத்தரவின் பேரின் ஸ்ரீவைகுண்டம் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் மேற்பார்வையில் சாயர்புரம் இன்ஸ்பெக்டர் மேரி ஜெமிந்தா, ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் அன்னராஜ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
நட்டாத்தி காட்டுப் பகுதியில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஓடை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்தனர்.

கைது
விசாரணையில், நட்டாத்தி பஞ்சாயத்து கொம்புகாரன் பொட்டல் ஊரைச் சேர்ந்த பேச்சிமுத்து மகன் தங்கராஜ் என்ற தங்கம் (20) என்பதும், நாகபத்திரனை கொலை செய்ததும் தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
காட்டுப் பகுதியில் மாடு மேய்த்துக்கொண்டிருந்த நாகபத்திரனை கண்ட தங்கராஜ் அவர் அருகில் சென்று போன் செய்ய வேண்டும் எனக்கூறி அவருடைய செல்போனை கேட்டுள்ளார். ஆனால் நாக பத்திரன் கொடுக்க மறுக்கவே அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தங்கராஜ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் நாகபத்திரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு, செல்போனையும் பறித்துச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
போலீசார் தங்கராஜிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும், செல்போனையும் பறிமுதல் செய்தனர். கொலை செய்யப்பட்ட நாகபத்திரனுக்கு நாகம்மாள் (60) என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்