பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது

Update: 2022-01-10 13:16 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று தொடங்கியது.
கொரோனா தடுப்பூசி
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்திலும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியான 14 லட்சம் பேர் உள்ளனர். இதில் 93 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. 52 சதவீதம் பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட 81 ஆயிரத்து 300 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. இதில் 67 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
பூஸ்டர் டோஸ்
இதைத் தொடர்ந்து கொரோனா 2-வது தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் (39 வாரம் அல்லது 273 நாட்கள்) முடிவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்து உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்கனவே பயன்படுத்திய அடையாள அட்டை அல்லது கொரோனா தடுப்பூசி சான்றிதழை கொண்டு சென்று நேரடியாக தடுப்பூசி மையங்களிலேயே செலுத்திக் கொள்ளலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணை நோய்க்கான சான்றிதழ்கள் ஏதும் சமர்ப்பிக்க தேவை இல்லை. முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். முதல் 2 தவணை எந்த தடுப்பூசி போடப்பட்டதோ, அதே நிறுவன தடுப்பூசியே பூஸ்டராக போடப்படுகிறது.
தொடக்கம்
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 ஆயிரத்து 163 பேர் அடுத்த 21 நாட்கள் பூஸ்டர் தடுப்பூசி போட தகுதி உள்ளவர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நேற்று தொடங்கியது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் நடந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பொற்செல்வன் முன்னிலையில், அரசு ஆஸ்பத்திரி டீன் நேரு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தினந்தோறும் நடைபெறும் தடுப்பூசி பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து தகுதியான அனைவரும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்