இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பயிற்சி வகுப்பறைகள் தொடக்கம்
திருபோரூர் தொகுதி எம்.எல்.ஏ முன்னிலையில் சேவையின் அடிப்படையின் மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்பித்து பயிற்சி அளிப்பதாக உறுதி மொழி ஏற்று கற்பித்தல் பணியை தொடங்கினர்.
கொரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் தொற்றால் தமிழகம் முழுவதும் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. மேலும் தொற்று அதிகரித்தால் சில நாட்கள் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட உள்ளன. இதையடுத்து வடகடம்பாடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தற்போது பள்ளி செல்லாமல் உள்ள மாணவ-மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் 5 இடங்களில் தன்னார்வலர்களாக உள்ள பெண்கள் மூலம் பாடம் கற்பித்தல் பணி தொடங்க வேண்டும் என்று தொடக்க கல்வி அதிகாரிக்கு திருபோரூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலாஜி உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து வடகடம்பாடியில் 5 தெருக்களில் உள்ள 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு சம்பளம் இல்லாத பயிற்றுனர்களாக பணியாற்ற உள்ள பட்டதாரி பெண்கள் 5 பேர் நேற்று வடகடம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பரசுராமன் தலைமையில் தொடக்க கல்வி அதிகாரி மற்றும் எஸ்.எஸ். பாலாஜி எம்.எல்.ஏ. முன்னிலையில் சேவையின் அடிப்படையின் மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடம் கற்பித்து பயிற்சி அளிப்பதாக உறுதி மொழி ஏற்று கற்பித்தல் பணியை தொடங்கினர். முன்னதாக பயிற்றுனர்கள் 5 பேருக்கும் கல்வி உபகரணங்களை திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலாஜி வழங்கி பேசினார். விழாவில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவிகாசண்முகம், தலைமை ஆசிரியர் சுகுணா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.