கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயார்

சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளன.

Update: 2022-01-10 00:28 GMT
சென்னை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மிக அதிகமாக பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் தமிழக ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களைவிட வீட்டுக் கண்காணிப்பில் இருப்போரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலவரப்படி 5 ஆயிரத்து 802 கொரோனா நோயாளிகள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அறிகுறி இல்லாதவர்கள், நுரையீரல் பாதிப்பு இல்லாதவர்கள், இணை நோய்கள் இல்லாதவர்களை வீட்டுக் கண்காணிப்பில் இருந்து சிகிச்சை பெற சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

6 ஆயிரத்து 450 படுக்கைகள்

சென்னையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறி இல்லாமலேயே தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அனைவரும் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் 6 ஆயிரத்து 450 படுக்கைகள் தயாராக உள்ளன.

7 சதவீதம்

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதலாக 700 படுக்கைகளும், ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 250 படுக்கைகளும் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. இந்த நிலையில் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் 290-க்கும் மேற்பட்டவர்களும், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 188 பேரும், ஓமந்தூரார் ஆஸ்பத்திரியில் 141 பேரும், கிண்டி கிங்ஸ் ஆஸ்பத்திரியில் 280 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் 115 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட படுக்கைகளில் 7 சதவீதம் மட்டுமே தற்போது நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்