பெங்களூருவில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மந்திரியின் மகனிடம் பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் - பிரபல ஜோதிடரின் மகன் கைது
பெங்களூருவில் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக கூறி மந்திரியின் மகனிடம் பல கோடி ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக பிரபல ஜோதிடரின் மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
மந்திரி மகனின் வீடியோ
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் கூட்டுறவுத்துறை மந்திரியாக இருந்து வருபவர் எஸ்.டி.சோமசேகர். இவர், பெங்களூரு யஷ்வந்தபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். மந்திரி எஸ்.டி.சோமசேகரின் மகன் நிஷாந்த். இந்த நிலையில், கடந்த மாதம் (டிசம்பர்) 25-ந் தேதி மந்திரி எஸ்.டி.சோமசேகரின் உதவியாளர்களான சீனிவாஸ்கவுடா மற்றும் பானுபிரகாசுக்கு நிஷாந்த், ஒரு இளம்பெண்ணுடன் இருப்பது போன்ற வீடியோ அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
மேலும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க பல கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு மர்மநபர் மிரட்டல் விடுத்திருந்தார். இதுபற்றி உதவியாளர் சீனிவாஸ் கவுடா, மந்திரி எஸ்.டி.சோமசேகர், அவரது மகன் நிஷாந்த் கவனத்திற்கு கொண்டு சென்றார். அப்போது அந்த வீடியோ போலியானது என்பதும், நிஷாந்த் புகைப்படத்தை ஒரு இளம்பெண்ணுடன் இணைத்து போலியாக சித்தரித்து இருப்பது தெரியவந்தது.
போலீசில் புகார்
இதையடுத்து, பெங்களூரு ஆடுகோடியில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் நிஷாந்த் புகார் அளித்தார். அந்த புகாரில் எனது தந்தை பா.ஜனதா ஆட்சியில் மந்திரியாக இருக்கிறார். நானும் பா.ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறேன். எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக எனக்கு எதிராக போலியாக வீடியோ தயாரித்து இருப்பதுடன், அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி ஒரு மர்மநபர் மிரட்டல் விடுப்பதாக கூறி இருந்தார்.
அதன்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, போலி வீடியோ தயரித்து மந்திரி மகனிடம் பணம் கேட்டு மிரட்டும் நபரை பிடிக்க உதவி போலீஸ் கமிஷனர் ஜெகன்நாத் ராய் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஜோதிடர் மகன் கைது
தனிப்படை போலீசார், மந்திரியின் உதவியாளருக்கு வீடியோ அனுப்பி வைத்து, செல்போன் சிம் மூலமாக அந்த நபரை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர். இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் பெங்களூருவை சேர்ந்த பிரபல ஜோதிடரின் மகனான ராகுல் பட் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில், மந்திரியின் மகனிடம் பல கோடி ரூபாய் பறிக்கும் முயற்சியில், இளம்பெண்ணுடன் மந்திரி மகன் இருப்பது போன்று போலியாக வீடியோ தயாரித்து மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இருப்பினும், வேறு ஏதாவது காரணமா?, இந்த வீடியோ விவகாரத்தில் ராகுல் பட்டுக்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைதான ராகுல் பட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது போலீசாருக்கு பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தது.
எம்.எல்.ஏ.வின் மகள் சிம்
அதாவது மந்திரி எஸ்.டி.சோமசேகரின் உதவியாளர்களுக்கு ஒரு செல்போன் எண்ணில் இருந்து ராகுல் பட் வீடியோ அனுப்பி வைத்திருந்தார். அந்த செல்போன் எண், விஜயாப்புரா மாவட்டம் இன்டி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான யஷ்வந்த ராயகவுடா பட்டீல் மகள் பெயரில் இருப்பதை கண்டுபிடித்தார்கள். இதனால் மந்திரி மகனுக்கு மிரட்டல் விடுத்த வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவியது. இதனை போலீசார் மறுத்து விட்டனர்.
எம்.எல்.ஏ.வின் மகள் தனது செல்போன் சிம் கார்டை, தன்னுடைய நண்பரான ராகேஷ் என்பவரிடம் கொடுத்திருந்தார். அந்த சிம் கார்டை ராகேசிடம் இருந்து ராகுல் பட் வாங்கி இருந்ததும், இந்த விவகாரத்தில் முதற்கட்டமாக எம்.எல்.ஏ.வின் மகளுக்கு தொடர்பு இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
பரபரப்பு
அதே நேரத்தில் எம்.எல்.ஏ.வின் மகளிடம் இருந்து ராகேஷ் எதற்காக சிம் கார்டை வாங்கி, ராகுல் பட்டிடம் கொடுத்தார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக ராகேசிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் கைதான ராகுல் பட்டிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி
உள்ளது.
மகளுக்கு தொடர்பு இல்லை
மந்திரி சோமசேகர் மகனிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான யஷ்வந்த ராயகவுடா பட்டீல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து பெங்களூரு போலீசாரும் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். அந்த சிம்மை எனது மகள் பயன்படுத்தவில்லை. அவர் தனது நண்பரான ராகேசிடம் கொடுத்திருந்தார். ராகேஷ் தான் ராகுல் பட்டிடம் கொடுத்திருக்கிறார். எனது மகளின் சிம் ராகேஷ் மூலமாக ராகுலிடம் எப்படி சென்றது என்பது தெரியவில்லை. இந்த விவகாரத்தில் எனது மகளுக்கு எந்த தொடர்பும் இல்லை. அவரே என்னிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும். அதற்காக உரிய விசாரணை நடத்தும்படி போலீசாரிடம் தெரிவித்துள்ளேன்" என்றார்.