குப்பைத்தொட்டி வேண்டும்
அந்தியூர் தேர் வீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளை கொட்டி சென்றுவிடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதியில் குப்பைகளை கொட்ட குப்பைத்தொட்டி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழரசி, அந்தியூர்.
தெருநாய்கள் தொல்லை
கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் திரளான பக்தர்கள் வந்து சாமியை தரிசனம் செய்து செல்வது வழக்கம். இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் முக்கிய வீதிகளான கடைவீதி, வடக்கு தெரு ஆகிய பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் உள்ளது. இந்த நாய்கள் அந்த பகுதியில் வருவோர், போவேரை துரத்தி தொல்லைகள் கொடுக்கின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், வீதியில் வசிப்போார் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கொடுமுடி.
தடுப்பு கம்பிகளால் இடையூறு (படம்)
அந்தியூர் பஸ் நிலையம் அருகே பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக வைக்கப்படும் தடுப்பு கம்பிகள் (பேரிகார்டு) கோவில் முன்பு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இது கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே கோவிலுக்கு வரும் பக்தர்களின் நலம் கருதி இடையூறாக உள்ள தடுப்பு கம்பிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பூபதி, அந்தியூர்.
தேங்கி கிடக்கும் குப்பைகள்
கோபியில் இருந்து ஈரோடு செல்லும் ரோட்டில் கரட்டூர் என்ற இடம் உள்ளது. அந்த இடத்தின் அருகில் பாரியூர் செல்லும் இணைப்பு சாலையில் 2 இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு தேங்கி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் ஒருவித துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதாரக்கேடும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீது குப்பை தூசிகள் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே தேங்கி கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், கரட்டூர்.
புதிய குடிநீர் தொட்டி தேவை
கோபி ஊராட்சிக்கு உள்பட்ட தொட்டியபாளையம் பகுதியில் ஊரடி தோட்ட வீதியில் 2 இடங்களில் பிளாஸ்டிக் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2 மாதங்களாக அந்த 2 பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகளும் உடைந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே புதிதாக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தொட்டியபாளையம்.