வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.

Update: 2022-01-09 20:13 GMT
ஈரோடு
வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் புறப்பட்டதால் ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஊரடங்கு அமல்
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு தினசரி அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கடந்த ஆண்டை போன்று மீண்டும் முழு நேர ஊரடங்கு வந்துவிடுமோ? என பலரும் அச்சத்தில் உள்ளனர்.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் உள்ள சிப்காட் தொழிற்சாலை மற்றும் செங்கல் சூளை, சாயப்பட்டறை, பிளீச்சிங் தொழிற்சாலை, பேக்கரிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மேலும் வடமாநிலத்தவர்கள் பலர் சொந்தமாக எலக்ட்ரானிக் கடைகளும் வைத்து நடத்தி வருகின்றனர்.
வெளி மாநிலத்தவர்கள்...
இவர்கள் தற்போது தங்களது குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநிலங்கள் செல்லும் அனைத்து ரெயில்களிலும் தற்போது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று இரவு நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ஈரோடு நிலையத்திற்கு வந்தனர். சொந்த ஊர் செல்வதற்காக பெட்டி படுக்கைகளுடன் அவர்கள் வந்திருந்தனர். இரவு முழுவதும் கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ரெயில் நிலையத்தின் முன் பகுதியில் காத்திருந்து தங்களின் சொந்த மாநிலங்களுக்கு கிளம்பிச்சென்றனர்.

மேலும் செய்திகள்