சாலைகள் வெறிச்சோடின வீட்டிற்குள் முடங்கிய மக்கள்
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தஞ்சை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். 45 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
தஞ்சாவூர்:
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தஞ்சை மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். 45 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன.
முழு ஊரடங்கு
கொரோனா தொற்று 3-வது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழகஅரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. திங்கள் முதல் சனி கிழமை வரை இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழகஅரசு அறிவித்தது. அதன்படி நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் பொதுமக்கள் தேவையான காய்கறிகள், இறைச்சி, மீன்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முதல்நாளே வாங்கி வைத்து கொண்டனர்.
45 ஆயிரம் கடைகள்
ஊரடங்கையொட்டி தஞ்சை மாவட்டத்தில் 45 ஆயிரம் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கை மீறி உரிய காரணங்கள் இன்றி சிலர் இருசக்கர வாகனங்களில் வந்தனர். அவர்களை போலீசார் அழைத்து எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட எல்லைகளில் 8 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வந்தனர். அத்தியாவசிய பொருட்களான பால் விற்பனை கடைகள், மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் வழக்கம்போல் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தன.
சில ஓட்டல்கள் மட்டும் திறந்து இருந்தன. ஆனால் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படாமல் பார்சல் உணவு மட்டுமே வழங்கப்பட்டது.
பொது போக்குவரத்து முடக்கப்பட்டதால் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. புறநகர் பகுதிகளுக்கு செல்லும் அரசு பஸ்கள் எல்லாம் கரந்தை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
விரைவு ரெயில்கள்
டவுன் பஸ்கள் எல்லாம் ஜெபமாலைபுரத்தில் உள்ள அரசு பணிமனையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ஆட்டோக்கள், கார்கள், வேன்களும் ஓடவில்லை. இதனால் தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறைந்த அளவிலேயே வாகனங்கள் சென்றன. தஞ்சை வழியாக சென்ற விரைவு ரெயில்கள் வழக்கம்போல் இயங்கின. இருந்தாலும் குறைந்த அளவிலேயே மக்கள் பயணம் மேற்கொண்டனர். சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று விரும்பிய மக்கள் ரெயில்களில் பயணம் செய்தனர். ரெயில் டிக்கெட்டுகளுடன் கார்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தவில்லை.
மார்க்கெட் அடைப்பு
தஞ்சை மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட், தஞ்சை பூக்காரத்தெரு பூச்சந்தை, கீழவாசல் மீன்மார்க்கெட் ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையும் அடைக்கப்பட்டிருந்தது.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மா உணவங்கள் திறந்து இருந்தன. சாலையோரம் வசிக்கும் ஆதரவற்ற பலருக்கு தன்னார்வலர்கள் பலரும் காலை, மதிய உணவு பொட்டலங்களை வழங்கினர். தியேட்டர்கள், அன்னை சத்யா விளையாட்டு அரங்கம், சுற்றுலா தலங்களான அரண்மனை, கலைக்கூடம், கல்லணை, மனோரா உள்ளிட்ட இடங்களும் மூடப்பட்டிருந்தன. பெட்ரோல் விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் திறந்து இருந்தன.