மீன்மார்க்கெட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில் மீன்மார்க்கெட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நுழைவு வாயிலில் கட்டைகளை போட்டு பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-01-09 20:04 GMT
தஞ்சாவூர்:
தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில் மீன்மார்க்கெட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நுழைவு வாயிலில் கட்டைகளை போட்டு பொதுமக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தற்காலிக பஸ் நிலையம்
தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, சந்தைகளைப் பிரித்து அமைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது.
அதன்படி, தஞ்சை கீழவாசல் பகுதியில் இயங்கி வரும் மீன் மார்க்கெட், கரந்தையில் காலியாகவுள்ள தற்காலிக பஸ் நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஊரடங்கின் போது இங்கு மீன்மார்க்கெட் செயல்பட்டதால் துர்நாற்றம் வீசியதோடு, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் இங்கு மீன்மார்க்கெட் அமைக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி வந்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு
இந்த நிலையில் நேற்று இரவு 2 மீன் லாரிகள் மீன்களை ஏற்றிக்கொண்டு பஸ் நிலையத்திற்குள் சென்று மீன்களை இறக்கின. இந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து மீன்மார்க்கெட் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் 3-வதாக வந்த மீன் லாரியை மறித்து, பஸ் நிலையத்தின் நுழைவு வாயிலில் கட்டைகளைப் போட்டு மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்ததும் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கலைந்து சென்றனர்
மேலும் இது தொடர்பாக இன்று பேசி முடிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்