முழு ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை முடங்கியது
அரியலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அரியலூர்:
முழு ஊரடங்கு
அரியலூர் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி அரியலூரில் ஆம்புலன்ஸ் வாகனத்தை தவிர பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. வழக்கமாக பரபரப்பாக காணப்படும் பஸ் நிலையம், மார்க்கெட் தெரு, காந்தி மார்க்கெட், செந்துறை ரோடு, தேரடி ஆகிய பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் விற்பனை நிலையம், பால் விற்பனை நிலையம் ஆகியவை திறந்திருந்தன. நகரில் ஒரு சில இருசக்கர வாகனங்கள் வந்து சென்றன. அரியலூர் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து, வாகன ஓட்டிகளிடம் முககவசம் அணிய வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினர்.
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நகர் முழுவதும் குப்பைகளை அகற்றினார்கள். கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் பால் கேன்களை லாரிகளில் ஏற்றி வெளியூர் அனுப்பும் பணிகள் வழக்கம்போல் நடந்தன. பெரும்பாலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சிமெண்டு ஆலைகளுக்கு இயக்கப்படும் டிப்பர் லாரிகள் மற்றும் சிமெண்டு மூட்டைகளை ஏற்றிச்செல்லும் லாரிகள் வழக்கம் போல் இயங்கின.
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள், வணிக வளாகங்கள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. வீதிகளில் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன் தலைமையில் போலீசார் ஆங்காங்கே சோதனைச்சாவடிகளை அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். மேலும் வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து அனுப்பினர். தேவையின்றி வாகனங்களில் வந்த 50-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
நகர் முழுவதும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷகிராபானு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், சுபா, இளங்கோவன், கல்யாணராமன் உள்ளிட்ட போலீசார் வாகன சோதனை மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு தேவையின்றி வந்தவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினர். முன்னதாக ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அத்தியாவசிய தேவையின்றி வந்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
மீன்சுருட்டி, தா.பழூர்
மீன்சுருட்டி பகுதியில் உள்ள கும்பகோணம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இந்த சாலையில் இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும் வந்த பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர். மருந்து கடைகள், பால் கடைகள் திறந்திருந்தன. டீக்கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகள் மூடப்பட்டிருந்தன.
தா.பழூர் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்து கடைகள், பால் கடைகள் செயல்பட்டன. விவசாயிகள் தங்களது வழக்கமான விவசாயப் பணிகளில் ஈடுபட்டனர். போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தஞ்சை மாவட்ட எல்லைப் பகுதியான மதனத்தூர் போலீஸ் சோதனைச்சாவடியில் அந்த வழியாக வந்த பிற மாவட்ட வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.
விக்கிரமங்கலம், உடையார்பாளையம்
விக்கிரமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மருந்து கடை, பால் கடை தவிர மற்ற கடைகள் பூட்டப்பட்டிருந்தன. பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை. சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. சாலைகளின் முக்கிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். விவசாயிகள் விவசாய பணிகளை தடையின்றி செய்தனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
உடையார்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன. பஸ், ஆட்டோ, லாரி, உள்ளிட்ட எந்த வாகனமும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. பொதுமக்கள் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் போலீசாரிடம் காரணங்களை கூறி சென்று வந்தனர். அவர்களை திருமணம் மற்றும் இறுதிச்சடங் குக்கு செல்ல மட்டும் போலீசார் அனுமதி அளித்தனர்.
செந்துறை
செந்துறையில் முக்கிய வீதிகளில் தாசில்தார் குமரய்யா தலைமையில் வருவாய்த்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் இன்றியும், தேவையின்றியும் சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள் 16 பேரை தடுத்து நிறுத்தி தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனர். இதேபோல் செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் தலைமையில் போலீசார் பல பிரிவுகளாக பிரிந்து திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தேவையின்றி வெளியே வந்த 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
இதனால் கடைவீதிகள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
ஆண்டிமடம்
ஆண்டிமடம் பகுதியில் மருந்து கடைகள், பால் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆண்டிமடம் 4 ரோடு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம், கார்களை நிறுத்தி அவசர தேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு மற்ற வாகனங்களை திருப்பி அனுப்பினர். மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை நிறுத்தி தேவையில்லாமல் சுற்றுபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மேலும் சிலருக்கு அபராதமும் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.