கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்து சென்று மதுபாட்டில்கள் வாங்கிய மதுபிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டதால், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு நடந்து சென்று மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்கினர்.

Update: 2022-01-09 19:28 GMT
கடலூர், 

ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்தது. இது தவிர முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் உத்தரவிட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதை யொட்டி அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இருப்பினும் பெரும்பாலான மதுபிரியர்கள் நேற்று முன்தினமே தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டனர்.

நடந்து சென்றனர்

மதுபாட்டில்கள் வாங்காதவர்கள் கடலூரை ஒட்டியுள்ள புதுச்சேரி மாநிலத்திற்கு சாவடி, ஆல்பேட்டை சோதனைச்சாவடிகளை கடந்து மது பாட்டில்கள், சாராயம் வாங்குவதற்காக சென்றனர். முழு ஊரடங்கையொட்டி வாகனங்களில் சென்றால் போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதி, நடந்தும், சைக்கிளிலும் செல்ல தொடங்கினர்.
ஆனால் அவர்களை போலீசார் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனால் அவர்கள் தங்களுக்கு தேவையான மது பாட்டில்கள், சாராயத்தை வாங்கி அங்கேயே குடித்து விட்டு வந்தனர். ஒரு சிலர் மது பாட்டில்களை வாங்கி வந்து குடித்தனர். சோதனைச்சாவடிகளில் சிக்கியவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பியதையும் பார்க்க முடிந்தது.

மேலும் செய்திகள்