ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு அபராதம்
அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு நகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.;
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டையில் ஊரடங்கு விதிகளை மீறிய கடைகளுக்கு நகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அருப்புக்கோட்டையில் நகராட்சி ஆணையர் அசோக்குமார் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், ராஜபாண்டி உள்ளிட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் ஊரடங்கு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பூ மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடையை மீறி பூக்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. பூக்கள் வாங்க ஏராளமான வியாபாரிகள் குவிந்ததால் அப்பகுதியில் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனையடுத்து சுமார் 20 கிலோ பூக்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ஊரடங்கு நேரத்தில் அரசு உத்தரவை மீறி பூ விற்பனை செய்ததாக வீட்டு உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
அபராதம்
தொடர்ந்து எஸ்.பி.கே பள்ளி சாலையில் சாலையோரம் மீன் விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு ரூ.ஆயிரம் அபரதாமாக விதித்தனர். மேலும் புதுக்கடை பஜார் பகுதியில் உள்ள இறைச்சிக்கடையில் சந்தேகத்தின் அடிப்படையில் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஆட்கள் பணி செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் அங்கு 50 கிலோ எடைகொண்ட இறந்த கோழிகள் அப்புறப்படுத்தாமல் அப்படியே இருந்தது. இதனையடுத்து அங்கிருந்த கோழிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கடை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் பெட்ரோல் பங்கில் பணியாளர்கள் முக கவசம் அணியாமல் பணி செய்ததை கண்ட அதிகாரிகள் பெட்ரோல் பங்கிற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.