ஞாயிறு முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
கொரோனா பரவலை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடின. தேவையின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கடலூர்,
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்த நிலையில், தற்போது உருமாறிய ஒமைக்ரான் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதன்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. வார நாட்களில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு என்றும் அரசு அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையொட்டி கடலூரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அதன்படி லாரன்ஸ் ரோடு, பாரதி சாலை, நேதாஜி ரோடு, செம்மண்டலம் ரோடு, இம்பீரியல் சாலை என அனைத்து பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.
கடைகள் அடைப்பு
நகைக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. இது தவிர பான்பரி மார்க்கெட், மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் போன்றவை முற்றிலும் அடைக்கப்பட்டு இருந்தது. இது தவிர உழவர் சந்தையும் மூடப்பட்டது. சில்வர் பீச், நகராட்சி சிறுவர் பூங்காவும் மூடப்பட்டு இருந்தது.
பொது போக்குவரத்து கிடையாது என்று அறிவிக்கப்பட்டதால், கடலூர் மாவட்டத்தில் உள்ள 11 பணிமனைகளில் இருந்து நேற்று பஸ்கள் இயக்கப்படவில்லை. பஸ்கள் அனைத்தும் பணிமனைகளில் பாதுகாப்புடன் நிறுத்தி வைக்கப்பட்டன. இதனால் அனைத்து பஸ் நிலையங்களும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. இதையடுத்து பஸ் நிலையங்களில் சுத்தும் செய்து கிருமிநாசினி தெளிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
வெறிச்சோடின
வாகன போக்குவரத்து இல்லாததால் கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், புவனகிரி, பண்ருட்டி, திட்டக்குடி உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சாலைகளும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடின. ஒரு சிலர் அத்தியாவசிய தேவைக்காக கார், மோட்டார் சைக்கிள்களில் சென்றனர். அவர்களை போலீசார் சோதனை செய்து அனுப்பினர். தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் அவர்களின் அடையாள அட்டையை காண்பித்து சென்றதை பார்க்க முடிந்தது.
அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை போலீசார் கண்டறிந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு அபராதமும் விதித்தனர். மேலும் விதிமுறைகளை மீறி இறைச்சி உள்ளிட்ட கடைகள் வைத்திருந்தவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர். டாஸ்மாக் கடைகள் நேற்று மூடப்பட்டதால் மது பிரியர்கள் சிரமப்பட்டனர். பெரும்பாலானோர் நேற்று முன்தினமே தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கி வைத்து விட்டனர்.
கோட்டாட்சியர் ஆய்வு
கடலூரில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பலராமன், போலீஸ் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் ஒரு குழுவாகவும், துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால்பாரிசங்கர் தலைமையிலான போலீசார் மற்றொரு குழுவாகவும் சென்று மஞ்சக்குப்பம், செம்மண்டலம், முதுநகர் என கடலூர் நகரின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர். அப்போது விதிமுறைகளை மீறி கடைகள் வைக்கப்பட்டு உள்ளதா? முக கவசம் அணியாமல் யாரேனும் வெளியில் நடமாடுகிறார்களா? என்று கண்காணித்தனர். மாவட்டத்தில் உள்ள மற்ற உழவர் சந்தைகளும் மூடப்பட்டன. மேலும் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையமும் மூடப்பட்டது.
சோதனைச்சாவடிகள்
கொரோனா விதிமுறைகளை மீறி சுற்றித்திரிபவர்களை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் தலைமையில் பல்வேறு இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். குறிப்பாக புதுச்சேரியில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கு வருவோரையும் தீவிரமாக போலீசார் கண்காணித்தனர்.