முழு ஊரடங்கால் கரூர் முடங்கியது-ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று கரூரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ரூ.300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
கரூர்,
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரசும் அச்சுறுத்துகிறது. இந்தநிலையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசால் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களும் முக கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கரூரில் நேற்று முழு ஊரடங்கையொட்டி எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜவகர்பஜார், காமராஜ் மார்க்கெட், கோவை சாலை, சர்ச் கார்னர் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள், இறைச்சி கடைகள், ஜவுளி கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
சாலைகள் வெறிச்சோடின
இதேபோல் கரூர் வெங்கமேடு, தாந்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் கரூர் அமராவதி பாலம், ஜவகர்பஜார், கோவை சாலை, வெங்கமேடு மேம்பாலம், காமராஜ் மார்க்கெட், செங்குந்தபுரம், உழவர்சந்தை, காந்திகிராமம், பசுபதிபாளையம், தாந்தோன்றிமலை பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. கரூரில் மருந்தகங்கள் வழக்கம்போல் இயங்கின. ஓட்டல்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்ததால், கரூரில் ஒருசில ஓட்டல்கள் மட்டுமே திறக்கப்பட்டு பார்சல் சேவை நடைபெற்றது.
கரூரில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டிருந்தன. பொதுபோக்குவரத்திற்கு அனுமதி இல்லாததால் கரூர் பஸ்நிலையம் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கரூர் பஸ்நிலையத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் கரூர் திருவள்ளூவர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் இளைஞர்கள் பலர் கிரிக்கெட், கூடைப்பந்து விளையாடுவார்கள். முழு ஊரடங்கையொட்டி இளைஞர் யாரும் வராததால் திருவள்ளூவர் மைதானமும் வெறிச்சோடி காணப்பட்டது.
வாகன சோதனை
கரூர் ரெயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய அனுமதி இல்லாததால் முன்பதிவு மையம் வெறிச்சோடி காணப்பட்டன. ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்ததால் ரெயில்களில் மட்டும் பயணிகள் வந்து சென்றனர். இந்த முழு ஊரடங்கில் கரூர் வழியாக பழனிக்கு பாதை யாத்திரையாக முருக பக்தர்கள் பலர் சென்றதை காணமுடிந்தது.
கரூர் மாவட்ட போலீசார் சார்பில் கரூர் மனோகரா கார்னர், லைட்ஹவுஸ் கார்னர், திருக்காம்புலியூர் ரவுண்டானா, திருமாநிலையூர், சுங்ககேட், காந்திகிராமம், தாந்தோன்றிமலை, சர்ச் கார்னர், வாங்கப்பாளையம் உள்ளிட்ட நகரின் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் பேரிகார்டு அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். இப்பணியில் 150-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
அபராதம் விதிப்பு
கரூர் மாவட்டத்தின் முக்கிய சாலைகளில் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார் அவசர தேவை மற்றும் பணிக்கு செல்பவர்களுக்கு மட்டும் அனுமதி அளித்தனர். பணிக்கு செல்பவர்கள் அடையாள அட்டையை காட்டிய பிறகே அங்கிருந்து செல்ல போலீசார் அனுமதித்தனர். மேலும் ஆன்லைன் மூலம் உணவு வழங்கும் நிறுவன ஊழியர்களுக்கு போலீசார் அனுமதி அளித்தனர். அத்தியாவசிய தேவைகளை தவிர தேவையில்லாமல் ஊர்சுற்றிய வாகன ஓட்டிகளை போலீசார் தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர்.
இந்தநிலையில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் நகர் முழுவதும் சென்று பார்வையிட்டார். மேலும் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தோகைமலை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளில் உள்ள கடைகள் அனைத்தும் நேற்று அடைக்கப்பட்டன. ஆனால் மருத்துவமனைகள், மருந்து கடைகள், பால், பெட்ரோல் விற்பனை நிலையம் ஆகியவை வழக்கம்போல் இயங்கின. ஊரடங்கு என்பதால் தோகைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
இதேபோல் மணப்பாறை-குளித்தலை, பாளையம்-திருச்சி உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும், தோகைமலை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் தலைமையில் அனைத்து பகுதியிலும் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
நொய்யல், தரகம்பட்டி
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நத்தமேடு, புன்னம்சத்திரம், மரவாபாளையம், நடையனூர், கரைப்பாளையம், பாலத்துறை, தவிட்டுப்பாளையம், புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. முக்கிய சாலைகளில் கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
இந்தநிலையில் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள ஒருசில பேக்கரிகளில் மறைமுகமாக வியாபாரம் நடைபெற்றது. அதேபோல் வாத்துக்கறி சமைத்து உணவு பொருட்களை விற்பனை செய்யும் ஓட்டல்களில் பார்சல் சேவைகள் மட்டுமே அனுமதித்த நிலையில் வாடிக்கையாளர்கள் அமரவைத்து உணவுகள் வழங்கப்பட்டன.
இதேபோல் தரகம் பட்டியில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப் பட்டு இருந்தன. முக்கிய சாலை களில் வாகன போக்கு வரத்து நிறுத்தப்பட்டு இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் உள்ள கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டிருந்தன. லாலாபேட்டை பகுதியில் இன்ஸ்பெக்டர் சுகந்தி தலைமையிலான போலீசார் சாலையில் சென்ற பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன் அவர்களுக்கு முக கவசம் கொடுத்தார். மேலும் கடைகள் முழுவதுமே அடைக்கப்பட்டு இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டது.
அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதேபோல் முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
நச்சலூர், குளித்தலை
முழு ஊரடங்கு காரணமாக நச்சலூர், இனுங்கூர், நெய்தலூர், நங்கவரம், பொய்யாமணி ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், டீக்கடை, மளிகைக்கடை, ஜவுளிக்கடை, இறைச்சிக்கடை உள்பட அனைத்து கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் குளித்தலை பஸ் நிலையம், கடைவீதி ஆகிய பகுதியில் ஊரடங்கு காரணமாக ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் காணப்பட்டது. குளித்தலை மற்றும் நச்சலூர் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம் பகுதியில் மலை வீதி, கடைவீதி, டி.என்.பி.எல். சாலைகளில் உள்ள மளிகை, ஜவுளி, காய்கறி, இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. ஓட்டல்களில் பார்சல் மூலம் உணவுகள் விற்பனை செய்யப்பட்டன. தளவாபாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள காலி இடங்களில் சிறுவர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள் முககவசம் அணியாமலும் ஊரடங்கை மீறி கூட்டம் கூடியும் கிரிக்கெட் விளையாடினர்.
ரூ.300 கோடி வர்த்தகம் பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற முழு ஊரடங்கால் ஜவுளி, நகைக்கடை, ஓட்டல், டீக்கடை, மளிகை கடைகள் உள்ளிட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் ரூ.300 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக வணிக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.