திருவண்ணாமலையில் 6 மாதம் கர்ப்பமாக இருந்த சிறுமி தற்கொலை முயற்சி
6 மாதம் கர்ப்பமாக இருந்த சிறுமி தற்கொலை முயற்சி
திருவண்ணாமலை
திருவண்ணாமலையை சேர்ந்த ஒரு சிறுமி சென்னை கோவளத்தில் பட்டிபள்ளம் என்ற பகுதியில் உள்ள பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தங்கி 6-ம் வகுப்பில் இருந்தே படித்து வருகிறார். தற்போது அவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனக்கு வயிறு வலிப்பதாக தாயாரிடம் கூறினார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு சிறுமியை திருவண்ணாமலைக்கு அழைத்து வந்தனர். கடந்த 7-ந் தேதி இரவு வீட்டில் யாருக்கும் தெரியாமல் சிறுமி விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் அவருக்கு பரிசோதனை செய்ததில் சிறுமி 6 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. தகவலை கேள்விப்பட்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சுய நினைவின்றி இருப்பதால் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாதிக்கப்பட்ட சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது குறித்தும், அவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள முயன்றார்? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.