முழு ஊரடங்கால் கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கால் சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. காரைக்குடியில் கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.

Update: 2022-01-09 18:13 GMT
சிவகங்கை,

முழு ஊரடங்கால் சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. காரைக்குடியில் கலெக்டர் நேரில் ஆய்வு நடத்தினார்.

முழு ஊரடங்கு

கொரோனா பரவல் 3-வது அலையை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே 15 வயதிலிருந்து 18 வயது வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அத்துடன் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் இந்த முழு ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்பட்டது. சிவகங்கை நகரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

சாலைகள் வெறிச்சோடின

அத்தியாவசிய தேவைகளான மருந்து கடை, பால் விற்பனை நிலையம், பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மட்டுமே திறந்திருந்தன. தெருக்களில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. கார், ஆட்டோ, பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
 ஓட்டல்களில் உணவுப்பொருட்கள் பார்சலாக மட்டுமே வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடித்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின்பேரில் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்டிருந்த 16 சோதனை சாவடிகளில் போலீசார் தடுப்பு ஏற்படுத்தி வாகனங்களை சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். அரசு, தனியார் மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழக்கம்போல் செயல்பட்டன.

கலெக்டர் ஆய்வு

அரசு அறிவித்துள்ள ஊரடங்கினையொட்டி காரைக்குடியில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரி, டாக்சி, ஆட்டோ ஆகியவை இயங்கவில்லை. கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன பெட்ரோல் பங்க், மருத்துவமனைகள் அவை சார்ந்த நிறுவனங்கள் இயங்கின. ஒருசில ஓட்டகளில் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் வியாபாரம். நடைபெற்றது. முழு ஊரடங்கு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று காரைக்குடி பகுதியில் கலெக்டர் மதுசூதன்ெரட்டி நேரில் ஆய்வு செய்தார்.

அபராதம்

முழு ஊரடங்கையையொட்டி இளையான்குடியில் தேவையின்றி ஊர்சுற்றியவர்கள், முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் வசூலிக்கப்பட்டது. இளையான்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத் தலைமையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், ஜான் கென்னடி ஆகியோர் சாலையில் சுற்றித் திரிந்தவர்கள், முக கவசம் அணியாதவர்கள், தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியவர்கள்,, ஊரடங்கை மீறியவர்கள் மீது ரூ.200 அபராதம் வசூலித்தனர். 
மேலும் பேரூராட்சி கணக்காளர் அழகர், மேற்பார்வையாளர் திராவிடன், போக்குவரத்து போலீசார் பாலசண்முகம், கண்ணன் மற்றும் இளையான்குடி பேரூராட்சி பணியாளர்கள் ஊரடங்கை மீறி ஊர்சுற்றியவர்களுக்கு அபராதம் விதித்து வசூல் செய்தனர். திருப்புவனம், சிங்கம்புணரி பகுதியிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின.

மேலும் செய்திகள்