முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடின. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
முழு ஊரடங்கு
கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் தொற்று பாதிப்பிலிருந்து மக்களை காக்கவும், தொற்று பரவலை கட்டுப்படுத்தவும் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவினை அடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் அனைவரும் நேற்று வெளியில் வராமல் வீடுகளுக்குள் இருந்தனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் புதிய பஸ் நிலைய பகுதி, பாரதிநகர், பழைய பஸ்நிலைய பகுதி, சாலைத்தெரு, அரசு ஆஸ்பத்திரி ரோடு, அரண்மனை உள்ளிட்ட பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முன்தினம் இரவு முதல் முன்அறிவிப்புடன் பஸ் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு விட்டதால் மக்கள் தங்கள் பயணங்களை தவிர்த்து கொண்டனர்.
கடைகள் அடைப்பு
பஸ்கள் வராததால் பஸ் நிலைய பகுதி முழுவதும் பஸ்கள் மற்றும் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. டெப்போக்களில் அனைத்து பஸ்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.மருந்து கடைகள், பெட்ரோல் பங்க்குகள், பால் பூத்துகள் மட்டும் திறந்திருந்தன. ஒட்டுமொத்தமாக அனைத்து பொதுமக்களும் அரசின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்ததால் ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி மாவட்டமே வெறிச்சோடி மக்கள் நடமாட்டமின்றி காணப்பட்டது.பரமக்குடி பகுதியிலும் முழு ஊரடங்கால் பஸ் நிலையம், பெரியகடை பஜார், சின்னக்கடை வீதி, காந்தி சிலை விதி உள்பட நகரின் முக்கிய சாலைகள் அனைத்தும் எந்தவித போக்குவரத்தும் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஊரடங்கால் அனைவரும் வெளியில் வராமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமேசுவரம்
முழு ஊரடங்கான நேற்று ராமேசுவரம் கோவில் ரதவீதி சாலை, அக்னி தீர்த்த கடற்கரை, சன்னதி தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
அதுபோல் முக்கிய சந்திப்பு சாலையான திட்டக்குடி சந்திப்பு சாலையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்ததுடன் இருசக்கர வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தனர்.
மேலும் ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு சுற்றுலா பயணிகளுடன் புறப்பட்ட கார், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தனர்.
வடமாநில சுற்றுலா பயணிகள் அவதி
சென்னையிலிருந்து நேற்று காலை ரெயில்களில் ராமேசுவரம் வந்திறங்கிய வடமாநில சுற்றுலா பயணிகள் ஊரடங்கு என்பது பற்றி தெரியாததால் கார், ஆட்டோ உள்ளிட்ட எந்த ஒரு வாடகை வாகனங்களும் இயக்கப்படாததால் ரெயில் நிலையத்தில் இருந்து கோவில் வரையிலும் உள்ள தங்கும் விடுதிகளை தேடி சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு கையில் பை உள்ளிட்ட உடைமைகளுடன் சாலைகளில் நடந்து சென்று அவதிப்பட்டனர்.
முழு ஊரடங்கு காரணமாக ராமேசுவரத்திற்கு நேற்று வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வந்த ஏராளமான கார், வேன் உள்ளிட்ட வாகனங்களையும் பாம்பன் ரோடு பாலத்தின் நுழைவு பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் துறை, வருவாய்த்துறை மற்றும் போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பி வைத்தனர்.