ராமேசுவரம் கோவிலில் போலீஸ் குவிப்பு
ராமேசுவரம் கோவிலில் உளவுத்துறை எச்சரிக்கையால் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவிலில் உளவுத்துறை எச்சரிக்கையால் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உளவுத்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் உள்ள முக்கியமான கோவில்களில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலும் ஒன்றாகும். அதுபோல் ஏற்கனவே ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாகவே கோவிலின் நான்கு வாசல் பகுதிகளிலும் 24 மணி நேரமும் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கூடுதல் போலீசார்
அதை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலில் கடந்த சில நாட்களாகவே தற்போது இருப்பதை விட கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. குறிப்பாக கோவிலின் கிழக்கு வாசல் பகுதியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு உள்ளிட்ட போலீசார் கூடுதலாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதுபோல் அவ்வப்போது கோவிலின் அனைத்து பிரகாரங்களிலும் போலீசாரும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் கோவிலின் மேல் பகுதி மற்றும் ரத வீதிகளிலும் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வருவதுடன் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் சுற்றி திரிகின்றனரா? என கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே 3 நாட்கள் தடை முடிந்த நிலையில் இன்று முதல் வழக்கம்போல் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பதால் கோவிலுக்குள் வரும் அனைத்து பக்தர்களும் போலீசாரின் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
ராமேசுவரம் கோவிலில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.